வாகனப் பதிவெண் தட்டுக்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பு
புதிதாக பதிவு செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கான வாகனப் பதிவெண் தட்டுக்களை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. வாகனப் பதிவெண் தட்டுக்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, சேஸ் இலக்கங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு வாகனப் பதிவெண் தட்டுக்களோ அல்லது ஸ்டிக்கர்களோ வழங்கப்பட மாட்டாது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், பதிவு செய்யும் நேரத்தில் தற்போது வாகனப் பதிவெண் தட்டுக்கள் வழங்கப்படாவிட்டாலும், வாகன உரிமையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ பதிவு எண் வழங்கப்படும் என்றார்.
மேலும், வாகன உரிமையாளர்கள் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட எண்ணை வாகனத்தில் கைப்பட எழுதி காட்சிப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்
.
இந்த ஏற்பாடு குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.