**கொழும்பு, மே 2024:** இந்த ஆண்டு வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு தாமரைக் கோபுரம் அதிநவீன டிஜிட்டல் அலங்காரங்களுடன் மக்களை கவரும் வகையில் தயாராகிவருகிறது. பௌத்த மதத்தின் முக்கியமான இந்தத் திருவிழாவின் மகத்துவத்தை டிஜிட்டல் கலைவடிவங்கள் மூலம் உணர்தும் வகையில், கோபுரம் முழுவதும் பன்முகக் கலையமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தரைத்தளம் முதல் கோபுர உச்சி வரை டிஜிட்டல் தோரணங்கள், பௌத்த இதிகாசங்களை விளக்கும் லேசர் திரை அலங்காரங்கள், நியோன் மின் விளக்குகள் மற்றும் ஊடாட்டமான தரைக்கட்டமைப்பு ஒளியமைப்புகள் போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவற்றுடன், வரலாற்று பௌத்தக் கதைகள், தர்மச் செய்திகள் மற்றும் அமைதிக் காட்சிகளை 3D திரைக்காட்சிகள் மூலமும் மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பு தாமரைக் கோபுர மேலாண்மை நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் யோகேஸ்வரன் நிரோஜன் கூறியதாவது: *“தெற்காசியாவின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகமாக தாமரைக் கோபுரத்தை மாற்றியுள்ளோம். வெசாக் பௌர்ணமியின் புனிதத்தையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் மக்கள் டிஜிட்டல் முறையில் அனுபவிக்க இந்த முயற்சி உதவும். தொழில்நுட்பத்தையும் பண்பாட்டையும் இணைக்கும் இந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவிலிருக்கும் அனுபவமாக அமையும்”* எனத் தெரிவித்துள்ளார்.
வெசாக் பண்டிகை, புத்தர் பிறப்பு, ஞானம் மற்றும் முக்தி ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாடும் நாளாகும். இப்பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் பல வண்ண ஒளி அலங்காரங்கள், தர்மசாலைகள் மற்றும் பந்தல் அமைப்புகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த வருடம், தாமரைக் கோபுரத்தின் டிஜிட்டல் அலங்காரம் பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில் கோபுரம் முழுவதும் ஒளி மின்னும் இந்த அலங்காரங்களைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர் என கணக்கிடப்பட்டுள்ளது. பௌத்தர்கள் மட்டுமல்லாது, கலையும் தொழில்நுட்பமும் இணையும் இந்தக் காட்சியை அனைவரும் ரசிப்பார்கள் என நம்பப்படுகிறது.
**ஒளிநிரல் காட்சிகள் மற்றும் நிகழ்வு தேதிகள்:**
– இடம்: கொழும்பு தாமரைக் கோபுரம்
– தொடக்கம்: மே 25, 2024
– நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை
இந்நிகழ்வு, பண்பாட்டு பாரம்பரியத்தை நவீன டிஜிட்டல் கலையுடன் இணைத்து, புதிய தலைமுறையினருக்கு வெசாகின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.