Home / Local / 876 கிலோ சட்டவிரோத சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

876 கிலோ சட்டவிரோத சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

வென்னப்புவ: இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, சுமார் 870 கிலோகிராமிற்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களுடன் ஏழு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 23ஆம் திகதி வென்னப்புவ, வெல்லமங்கர (Wellamankara) மீன்பிடித் துறைமுகத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 876.2 கிலோகிராம் சுறா மீன்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட இந்த மீன்கள் ‘அலோபியாஸ் வல்பினஸ்’ (Alopias vulpinus) எனப்படும் ‘சவுக்கவால் சுறா’ (Thresher Shark) இனத்தைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுறா மீன்கள் மற்றும் அவர்கள் பயணித்த மீன்பிடி படகு என்பன மேலதிக விசாரணைக்காக வென்னப்புவ மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மீன்பிடித் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையின் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின்படி, குறிப்பிட்ட சில சுறா இனங்களைப் பிடிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சுறாக்களின் எண்ணிக்கை கடலில் வேகமாக குறைந்து வருவதால், கடல் சூழலியல் சமநிலையைப் பேண இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவுக்கவால் சுறா போன்ற இனங்கள் சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்பட வேண்டியவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *