ஒரு விளைவு இன்னொரு விளைவை உருவாக்கும். அது மற்றொரு விளைவுக்கு இட்டுச் செல்லும். இப்படி ஒன்றில் தொட்டு இன்னொன்றாய்ப் பரவும் தொடர் விளைவை, ஆங்கிலத்தில் 'Domino Effect' என்பார்கள். அதுதான் இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் விளைவுகள், விதம் விதமாக வெளிவந்த வண்ணமுள்ளன.
ஏனைய கட்சிகள் கூட, ஊழலற்ற வேட்பாளர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கிறது.
குறைந்தபட்சம் ஊழல், மோசடிக்கு எதிராகப் பேச வேண்டி வந்திருக்கிறது.
அப்படி அவர்கள் வலிந்து பேசினாலும் கூட, அது அவ்வளவு தூரம் எடுபடுவதாய் இல்லை.
இன்னொரு விடயம், புதிய முகங்களைக் களமிறக்குவது.
இளைஞர்களுக்கு வழிவிடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தோருக்கு, இப்போது இளம் தலைமுறை பற்றி கட்டாயமாகப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது.
காலாகாலமாக கதிரைகளைக் கட்டிப் பிடித்திருந்த பலர், அட்டைப் பெட்டி சரிவது போல் சரிந்து கொண்டிருக்கிறார்கள்.
சில அரசியல்வாதிகளுக்கு இது 'கட்டாய ஓய்வை' (Compulsory Retirement) அறிவிக்க வேண்டிய கட்டமாக மாறியிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேன, காமினி லொகுகே, பந்துல குணவர்த்தன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஜோன் செனவிரத்ன, அலி சப்றி... என்று இப்படி ஓய்வை அறிவித்தோரின் பட்டியலொன்று வெளியாகியிருக்கிறது.
30 வருடங்களாக எம்.பியாய் இருந்த - அதிலும் 24 வருடங்கள் கட்சித் தலைவராக இருந்த - றவூப் ஹக்கீமே ஆடிப் போயிருக்கிறார்.
கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவது கூட, இம்முறை அவருக்கு சவாலாக மாறியிருக்கிறது.
'20 ஆவது திருத்தத்துக்கு கை உயர்த்தியோரை உள்வாங்க மாட்டோம்" என றிஷாட் அறிக்கை விடுகிறார். பாவம், இவர்களுக்கு அரசியல் அரங்கில் 'ஏதாவது' விடயத்தைப் பேச வேண்டும் என்ற சூழ்நிலை. அவரும் அரசியல் தடுமாற்றத்தையே வெளிப்படுத்துகிறார்.
ஹிஸ்புல்லாஹ்வின் நிலையும் அவ்வளவு தெளிவாக இல்லை. அதாவுல்லாஹ்வும் முஷாரபும் எப்படிப் போட்டியிடுவது என்ற வியூகங்களை வகுப்பதில் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்படி இடியப்பச் சிக்கலுக்குள் அகப்பட்ட பலர், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்திற்கு அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில், 2 பேர் மட்டுமே முன்னர் எம்.பியாக இருந்தவர்கள் என்கிறார் சுமந்திரன். பட்டியலில் புதுமுகங்கள் தெரிகின்றன. அவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.
ரணில்-சஜித் தரப்பு இணைந்து, தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் - அது தொடர்பான பேச்சுவார்த்தைகள், வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில், ரணில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தோல்விப் பயம், நாமல் ராஜபக்சவை தேசியப் பட்டியல் பக்கம் திருப்பியுள்ளது. மாவட்ட ரீதியான தேர்தல் போட்டிக்கு அவர் தயாரில்லை.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைப் பல அரசியல்வாதிகள், முன்கூட்டியே சரியாகக் கணிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
சஜித் அல்லது ரணில் வெல்வார் என்ற 'வழமையான வாய்பாட்டுக்குள்' அவர்கள் சுருங்கியிருந்தார்கள். 'சங்கு தப்பினால் கணபதி' என்ற கதை இம்முறை எடுபடவில்லை. இதனால் எங்கே தாவுவது என்று தெரியாமல், கலங்கி குழம்பி தடுமாறி நிற்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பலரை ஆட்டம் காணச் செய்திருக்கிறது என்பதுதான் வெளிப்படை உண்மை.
Domino Effect இன் புதுப்புதுத் திருப்பங்களை இனியும் எதிர்பார்க்கலாம்.
பலரின் ஏமாற்று அரசியல்- கபட நாடகம் இம்முறை முடிவுக்கு வரலாம்.
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?"
சிராஜ் மஷ்ஹூர்
07.10.2024
0 Comments