பெற்றோர்கள் எனும் அற்புதம்!

வயது முதிர்ந்த பெற்றவர்களை குறிப்பறிந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய தொழிலை செய்து குடும்பத்தை நடத்தும் ஒரு பெரியவரை பல வருடங்களாக அறிவேன்.

கேட்டு வருபவர்களுக்கு  இருபது ரூபாய்களாவது கொடுப்பது அவரது வழக்கமாக இருந்தது, அதற்காக காசை ஒதுக்கி வைத்துக் கொள்வார்.

தினமும் வீட்டில் இருந்து தரப்படும் காலை மற்றும் பகல் உணவை மாத்திரம் உட் கொள்ளும் அவர் வீண் விரயம் செய்ய மாட்டார், தனது கடையில் தேநீர் தயாரித்துக் கொள்வார்.

தான் காலை மற்றும் பகலுணவோடு கடையில் யோகட் அல்லது பழம் வாங்கும் வழமையை கொண்டிருந்தார், நானும் பழங்கள் வாங்கினால் அவருக்கும் கொடுக்கும் வழமை இருந்தது.

ஒரு மாதிரியாக தனது இரண்டு ஆண் பிள்ளைகளையும்  ஒரு பெண் பிள்ளையையும் படிக்க வைத்து நல்ல தொழில்களில் அமரவும் செய்தார், அவர்களுக்கு திருமணமும் ஆகி விட்டது.

அண்மையில் ஒருநாள் அவரிடம் இரண்டு பழங்களை கொடுத்த போது இவ்வாறு சொன்னார்..

எமக்கு வயதாகி விட்டது, முன்பு போல் கடினமாக உழைக்கவும் முடியாது, தொழில் வருமானமும் இல்லை, இருவருக்கும் மருந்து மாத்திரை செலவுகளும் அதிகம்.

இப்போது செலவுகளை குறைத்துக் கொள்வதால் பழங்கள் இனிப்பு பண்டங்கள் வாங்குவதனை, வேளா வேளை தேநீர் அருந்துவதனை குறைத்துக் கொண்டோம் எல்லாவற்றிற்கும் பிள்ளைகளிடம் கையேந்த முடியாதல்லவா? என்று முகம் வாடியவராக கூறினார்.

அவ்வளவிற்கும் பிள்ளைகள் சொந்த வாகனங்கள் வைத்து குடும்பங்களோடு வசதியாக வாழ்கிறார்கள், அதிகமாக சிறந்த உணவகங்களுக்கு செல்வதும், அவற்றிலிருந்து தருவிப்பதும் என தாராளமாக செலவு செய்பவர்கள்.

தாய் தந்தையர் பிள்ளைகளிடம் கையேந்த மாட்டார்கள், அவர்களது அன்றாட தேவைகளை அறிந்து அவர்களாக கேட்பதற்கு முன்னரே பிள்ளைகள் செய்ய வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் அவர்கள் உண்ணும் பொழுதும் பருகும் பொழுதும் பிள்ளைகள் நினைவாகவல்லவா இருப்பார்கள்.

அவர்களது அன்றாட செலவினங்கள் போக கைச் செலவிற்கு தம்மிடம் யாசகம் கேட்பவர்களுக்கு கொடுத்துதவ காசு இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அவர்களது உடன் பிறப்புகள், உறவுகளை சென்று பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும், அவர்கள் வரும் போது உபசரிக்கும் ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

பெற்று வளர்த்து ஆளாக்கி திருமணம் வரை அள்ளித் தந்த அவர்களுக்கு கடமைக்காக கிள்ளித் தரும் அளவிற்கு கல் நெஞ்சம் படைத்தவர்களாக நாம் இருந்து விடக் கூடாது.

பெற்றவர்கள் மட்டுமல்ல தம்மோடு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அவரது பிள்ளைகள் நெருங்கிய உறவினர்கள் கூட அவ்வாறான நிலையில் இருக்கலாம், ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்த பலர் பல்வேறு படித்தரங்களில் இருக்கலாம்.

திருமணமான பின் பெற்ற வளர்த்த உடன்பிறந்த கடன்களை செய்ய முடியாமற் போகும் காரணிகளும் இருக்கத் செய்கின்றன, தமது பலவீனங்களோ அல்லது பிறரது பலவீனங்களோ எம்மில் மேலாதிக்கம் செய்யாத விதத்தில் வாழ்வை அமைத்துக் கொள்வதும் சமாளிக்க வேண்டிய சவால் தானே!

வாழ்க்கை என்றாலே பகட்டான ஊர் உலகிற்கு முன்னர் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் உறவுகள் தானே!

எனதிரட்க்ஷகா! அவர்களிருவரும் என்னை சிறியவனாக பரிவோடும் பாசத்தோடும் அரவணைத்து பார்த்துக் கொண்டது போன்று நீ அவர்கள் மீது கருணை கொள்வாயாக!
ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரன்!

உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் பலஸ்தீன் காஸா உறவுகளையும் (பதியும் பகிரும்) எம்மையும் எமது பெற்றோர் உடன் பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவினர் அன்பிற்குரியோர் ஆசான்கள் அறப்பணிகள் புரிவோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
03.10.2024 

Post a Comment

0 Comments