கம்மன்பிலவின் நகைச்சுவை நாடகம் திரிசங்கு நிலையில்!

 


கம்மன்பிலவின் நகைச்சுவை நாடகம், நாலாபுறங்களிலும் இருந்து எழுந்த கடுமையான எதிர்வினை காரணமாய் தொடர்ச்சியாய் திரையிட முடியாமல் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. காதினலும் காறித் துப்பி இருக்கிறார்.


ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் விசாரணை சரியான நபர்களின் கரங்களுக்கு மீண்டும் சென்று இருப்பதால் கலவரமடைந்து இருக்கிறது செத்த பிணங்களின் மேல் ஏறி 2019ல் ஆட்சிக்கு வந்த கம்மன்பில தரப்பு. 

கம்மன்பில தூக்கிக் கொண்டு வந்து மூக்குடைபட்ட அறிக்கையின் பின்னணியும் சுவாரஷியமானது. முன்னாள் சீ ஐ டி யின் விசாரணை அதிகாரிகளான ஷானி அபேசகரவும், ரவி செனவிரட்னவும் இந்த வருடம் ஜுன் மாதம் என் பி பி யின் ஓய்வு பெற்ற பொலிஸ் மாநாட்டில் கலந்து கொண்டு மேடை ஏறப் போவதாய் செய்தி வந்த மறுகணமே பதறிப் போனார் ரணில். சாகல ரட்னாயக்க மூலம் ரவி செனவிரட்னவுக்கு ரணில் தூது அனுப்பியதாகவும் ஆனால் அவரோ ரணிலோடு இணைய முற்றாய் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அநுரவின் மேடையில் ஷானியும் ரவியும் ஏறி சிரிசேனா - ரணில் ஆட்சி முதல் கோட்டாபய பதவிக்கு வந்தது வரை நடந்த அத்தனை குளறுபடிகளையும் பதிவு செய்தார்கள். ஷானி, டாக்டர் ஷாபி பற்றிப் பேசும் போது அரங்கம் நிசப்தத்தில் உறைந்து போனது. தொடர்ந்து மேடை ஏறிய அநுர, கோட்டாபய காலத்தில் தொழில் இழந்து சிறை சென்று அரசியல் பழிவாங்கலுக்குள்ளான ஷானிக்கும் ரவிக்கும் தாம் பதவிக்கு வந்ததும் நீதியை நிலை நாட்டப் போவதாய் அறிவித்தார். 

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட அக்கூட்டம் பலருக்கு நிரந்தர பய அலார்ம்களை அலறவிட என்பி பி இன் செல்வாக்கு மிகச் சடுதியாய் அதிகரிக்கக் காரணமானது. 

ராஜபக்சேக்களின் ஓய்வு பெற்ற ஆஸ்தான பொலிஸ் கோஷ்டியும் பதிலுக்கு ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இவர்களுக்கு எதிராய்ப் புலம்பியது.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த போது ரணில் ,ஜயகிதி அல்விஸ் என்ற முன்னாள் நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்தார்.இதன் நோக்கம் புலனாய்வுத் தகவல்கள்படி ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க பொலிஸ் அதிகாரிகள் சரியான முறையில் செயற்பட்டார்களா என்று ஆராய்வது. 

மறைமுக நோக்கம் ரவியையும் ஷானியையும் கை நீட்டுவது.

செப் 18ம் திகதி அந்த அறிக்கை ரணிலிடம் வந்தது. செப் 21ல் தேர்தலில் தோற்ற ரணில் வீட்டுக்குப் போனார். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அறிக்கை கம்மன்பிலவிடம் வந்து சேர்ந்ததன் பின்புலம் இதுதான். ஸ்கொட்லாந்து யார்ட் பொலிசைக் கூட்டி வந்து விசாரணை செய்யப் போவதாய் 2022ல் ஜனாதிபதியான புதிதில் வாக்குக் கொடுத்த ரணில் இப்படித்தான் மற்றொரு கோட்டாபயவாய் சோரம் போனார்.

2023ம் ஆண்டு சேனல் 4 தொலைக்காட்சியில் அஸாத் மெளலானா தோன்றி சர்ச்சையான விவகாரங்களைக் கோர்வையாய் முன்வைத்த போது ரணில் அதுபற்றி ஆராய மற்றொரு கமிட்டி போட்டிருந்தார். இந்த அறிக்கையும் கம்மன்பிலவிடம் இருக்கிறதாம். மற்றபடி ஒன்றரை வருடங்களாய் விசாரணை நடந்து நானூறுக்கு மேல் சாட்சிகளும், ஆயிரத்திற்கு மேல் வாக்குமூலங்களும் பதிவான ஜனாதிபதி விசாரணைக் கமிஷனிலோ , பாராளுமன்ற விசாரணைக் கமிஷனிலோ ஷானி மற்றும் ரவிக்கு எதிராக கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்று எந்தவித முறைப்பாடுகளும் இல்லை.

பதவியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிரிசேனா, முன்னாள் புலனாய்வு தலைவர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்து போன்றோர் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்தினர்.இதில் அன்றைய பிரதமரான ரணில் அப்போது ஜனாதிபதியாய் இருந்ததால் ஜனாதிபதி வரப்பிரசாதத்தால் தப்பிப் பிழைத்தார்.

உயிர்த்த ஞாயிறு மர்மங்கள் என்பது எங்கே தொடங்கி எங்கே முடியும் என்று சொல்ல முடியாத ஆயிரத்தில் ஒரு இரவுகள் கதை போன்றது. ஏராளமான கிளைக்கதைகள் உண்டு.இதற்கு என்றே தனி வெப்சைட் தொடங்கி மக்கள் பார்வைக்கு விடுமளவுக்கு விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்மன்பிலவினதும் அவர் போட்டியிடும் கூடாரத்தினதும் பின்புலம் எல்லோருக்கும் தெரியும். கம்மன்பிலவிற்கு திடீர்க் காக்காய் வலிப்பு ஏற்பட்டு இருப்பது ஒன்றும் ஆச்சர்யமல்ல.

Zafar Ahmed

Post a Comment

0 Comments