இன்று சமூக ஊடக பதிவுகள் மூலம் காசு உழைப்பது ஒரு டிரண்ட் ஆக மாறிவருவதால் பலரும் தமது அறிவு ஆற்றல் திறமைகளை நிபுணத்துவங்களை பதிவுகளாக இட்டு அவற்றிற்கு கிடைக்கும் அங்கத்தவர் எண்ணிக்கை விருப்புக்கள் ஊட்டங்கள் என பல வழிகளில் டாலர் சதங்களை கொடுப்பனவுகளை பெறுவது ஒரு பொழுது போக்காக ஆகி விட்டது.
அவர்களது கணக்குகளது ஆதரவாளர்கள் ஆயிரங்களில் இலட்சங்களில் அதிகரிக்கும் போது சமூக ஊடக நிறுவனங்களும் அவர்களை பரிசுகள் சின்னங்கள் தந்து ஊக்குவிப்பதனை காண முடியும்.
அந்த வகையில் தமது கணக்குகளில் அங்கத்தவர்களை பின்தொடர்பவர்களை அதிகரிப்பதற்காக குறும் காணொளி பதிவுகளை, வீடியோக்களை தினமும் இட்டு வருகின்றனர்.
அன்றாட வாழ்வில் ஆக்கபூர்வமாக பயன் தரும் அடுப்படி சமையல் முதல், கற்பித்தல், கைப்பணிகள், பிரத்தியேக வகுப்புக்கள், மார்க்க விளக்கங்கள், நல்லுபதேசங்கள், கல்வி தொழில் வழிகாட்டல்கள், ஆலோசனைகள் என பல பதிவுகள் பலராலும் இடப்படுகிறன.
இன்னும் சிலர் மனித அவலங்களை, கஷ்ட நஷ்டங்களை, இல்லாமை இயலாமைகளை, பதிவு செய்து பரோபகாரிகளாக தம்மைப் படமெடுத்து பதிவுகளையேற்றி நன்கொடைகளையும் சேகரித்து ஆட்டையைப் போடுகிறார்கள்.
அதேவேளை இன்னும் சிலர் சாதனைப்பயணங்கள் என ஓடியும் நடந்தும் நாட்டை வளம்வருவது, பாடுவது, ஆடுவது, அரட்டை அடிப்பது, சேட்டைகள் புரிவது எனவும் பதிவுகளை இட்டு வருகிறார்கள்.
இன்னும் சிலர் இன்ப அதிர்ச்சி தருவதற்காக குறும்புகள் செய்வது, நகைச்சுவைகளை, கடிஜோக்குகளை பதிவிடுவது என ரீல்ஸ்களை தயாரித்து ரிலீஸ் பண்ணுகிறார்கள்.
இன்னும் பலர் பெரியவர் சிறியவர் என பார்க்காது, இடம் பொருள் ஏவலறியாது சேட்டைகள் கேலிகள் செய்வது நையாண்டி பண்ணுவது, சீண்டி விட்டு சிரித்து மகிழ்வது என அடுத்தவரை தொந்தரவு செய்து நோவினை செய்து காயப்படுத்தி காசு உழைப்பதை பொழுது போக்காக அன்றி முழு நேர தொழிலுக்காவும் செய்கிறார்கள்.
சிலர் வயது வந்தவர்களுக்கு மட்டுமான பாலியல் சேட்டைகளை பதிவுகளை இட்டும் மட்டரகமான உழைப்பில் ஈடுபடுகிறார்கள்.
சிலர் சிறுவர் மாதர் துஷ்பிரயோகங்களை, அந்தரங்க விடயங்களை, காதல் சேட்டைகளை பதிவேற்றியும் வரம்பு மீறிய பதிவேற்றங்களைச் செய்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்ப அதிர்ச்சி எல்லைகளைத் தாண்டி துன்ப அதிர்ச்சிகளை பதிவு செய்யும் தீய குணம் கொண்டவர்களையும் காண முடிகிறது, சிறிய ஆபத்துகளை விளைவிக்கும் பதிவுகள் மட்டுமன்றி காயங்களை மரணத்தை ஏற்படுத்தும் பலரது மனநிலைகளை பாதிக்கும் பதிவுகளையும் இடுகின்றனர்.
கவலைக்குரிய விடயம் யாதெனில் ஓரளவு பகுத்தறிவு புரிந்துணர்வு பக்குவம் முதிர்ச்சி உள்ளவர்கள் தவிர்த்து மடையர்களும் பின்விளைவுகள் அறியாத கல்வி அறிவு பொது அறிவு இல்லாத அடிமுட்டாள்களும் எவருமே எதிர்பாராத நிலையில் அடுத்தவர்களை சங்கடத்தில், ஆபத்தில் தள்ளி விடுகின்றார்கள்.
வரலாகும் இந்த இன்ப அதிர்ச்சிகள் துன்ப அதிர்ச்சிகளை, பிரான்க்குகள், கேளிக்கைகளை எதிர்வினைகள் இன்றி பஃன்னாக விளையாட்டாக ஏற்றுக் கொள்ளுமாறும் பாதிக்கப்பட்டவனும் பல் இளித்து படத்திற்கு போஸ் கொடுக்குமாறும் வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள்.
இது இந்த யுகத்தில் எதிர்பார்த்து எச்சரிக்கையாக நாம் நடந்து கொள்ள வேண்டிய ஷைத்தானிய சேட்டைகளாகும், எதிர்பாராத சாலை விபத்துக்களை, கொடிய மிருகங்களின் தாக்குதல்களை, விஷ ஜந்துக்களின் தீண்டல்களை அஞ்சுவது போல் நாமும் எமது அன்பிற்குரியவர்களும் பிள்ளைகளும் முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
சமய சன்மார்க்க நிறுவனங்கள் பாடசாலைகள் அடிப்படை ஆன்மீக பண்பாட்டு விழுமியங்களை அத்துமீறும் இத்தகைய இழி செயல்கள் குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறைகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும், மிம்பர் மேடைகளில் ஊடகங்களில் வரைமுறைகளை சொல்லித்தர வேண்டும்.
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
22.10.2024
0 Comments