AKDயின் வெற்றியில் சோசியல் மீடியாவுக்கு பாரிய பங்கு!

அநுர குமார திஸாநாயக்க அவர்களின் வெற்றிக்கு வழிசமைத்ததில் அவர் சார்பில் முன்னெடுக்கப்பட்ட சமூக ஊடகப் பிரசாரங்களும், சமூக ஊடகத் தளங்களில் அவர் மேற்கொண்ட மக்களுடனான ஊடாட்டமும் (interaction) முக்கிய வகிபாகம் வகித்திருந்தன. 

இது தொடர்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் உள்ளூர் வேட்பாளர்களும் கூடுதல் கவனம் செலுத்துவது உங்களுக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பது எனது கருத்து. 

இந்நாட்களில் அதிகமான மக்கள்/வாக்காளர்கள் பேஸ்புக் மற்றும் வட்ஸப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பிரசன்னமாகி, அங்கிருந்தே தமக்குத் தேவையான தகவல்களை அதிகம் பெற்றுக் கொள்கின்றனர். அதேவேளை, தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும், எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் நேரடியாக வேட்பாளர்களிடம் அத்தகைய தளங்களுக்கூடாகத் தெரிவிக்கின்றனர். 

அவற்றுக்கு வேட்பாளர் தரப்பிலிருந்து சரியான முறையில் பதிலளிக்கப்பட அல்லது எதிர்வினையாற்றப்பட வேண்டும். 

அதற்கான போதிய நேர அவகாசம் இல்லாத வேட்பாளர்கள், தனக்கு நம்பிக்கைக்குரிய மற்றும் பக்குவமான முறையில் மக்களின் கருத்துக்களை/எதிர்பார்ப்புக்களை கையாளக்கூடிய தனது பிரதிநிதி ஒருவரை Admin ஆக நியமித்து அப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற வழிவகுக்க வேண்டும். 

இது தேர்தல் காலம் என்பதால் களத்தில் மாத்திரம் பணியாற்ற முண்டியடிக்கும் வேட்பாளர்கள், நிகழ்நிலைத் தளத்திலும் (online platform) அதற்கு நிகரான முக்கியத்துவம் கொடுத்து களமாட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிரதிபலனை நிச்சயம் அவர்கள் தமது தேர்தல் முடிவுகளில் கண்டுகொள்ள முடியும். 

மக்கள் தொடர்பு மற்றும் மக்களுடனான ஊடாட்டம் என்பது ஒரு தேர்தலைப் பொறுத்தவரை இன்றியமையாதது. அது இயல்பிலேயே சிலருக்கு கைவரப்பெற்றிருக்கும். அவர்களது வெற்றியின் மிகப்பெரும் இரகசியமும் அதுவாகவே இருக்கும். அத்தகைய இயல்திறன் இயல்பிலேயே இல்லாதவர்கள் அல்லது அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என எண்ணுபவர்கள், உங்கள் வெற்றிக்காக வலிந்தேனும் அத்தகைய இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

✍️ இர்ஹாம் சேகுதாவூத்

Post a Comment

0 Comments